| ||
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த இயற்பியல் தேர்வு, ஒட்டுமொத்த அளவில் எளிதாக இருந்தது. 5 மதிப்பெண் பகுதியில் சில கேள்விகள், குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. | ||
பிளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான இயற்பியல் தேர்வு நேற்று காலையில் நடந்தது.தேர்வெழுதிவிட்டு, வெளியே வந்த பள்ளி மாணவர்கள், "தேர்வு எளிதாக இருந்தது. குளறுபடியான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை" என்றனர். கேள்வித்தாள் குறித்து, இயற்பியல் ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ஒட்டுமொத்த அளவில், கேள்வித்தாள் மிகவும் எளிதாகவே அமைந்திருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், 30க்கு 18 கேள்விகள், பாடப் புத்தகத்தில் இருந்து நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தன. 3 மதிப்பெண் பகுதியில், மொத்தம் 12 கேள்விகள். அதில் 7 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஐந்து கேள்விகள்,"சாய்ஸ்!&' இதில், மூன்று கேள்விகள் மாணவர்களை குழப்பும் வகையில் கேட்கப்பட்டுள்ளன. கேள்விகள் சரியானவை என்றாலும், மாணவர்கள் திணறும் வகையில், சுற்றி வளைத்து கேட்டதால், பல மாணவர்கள் அந்த மூன்று கேள்விகளையும்,"சாய்சில்&' விட்டு விட்டனர். கேள்வி எண் 62ல், "தகவல் தொடர்பு அமைப்பியல்" என்ற பாடத்தில் கேட்கப்பட்டது. அந்தப் பாடத்தில் இருந்து வழக்கமாக கேட்கப்படும் கேள்விக்குப் பதிலாக, கணக்கு கேள்வியாக கேட்டு விட்டனர். இதை மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை. மற்றபடி, எந்தெந்த பாடங்களில் இருந்து, எத்தனை கேள்விகள் வரும், எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்று மாணவர்களுக்கு முன்கூட்டியே கூறியிருந்தோம். அதே மாதிரி கேள்விகள் வந்திருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தேர்வு எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்த போதும், நேற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு 24 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். இவர்கள் அனைவரையும், தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிடிபட்ட மாணவரைப் பற்றி, சுவாரஸ்யமான தகவல்களை, அதிகாரிகள் தெரிவித்தனர். சரியாக படிக்காமல் தேர்வுக்கு வந்த அம்மாணவர், தெரிந்தவரை விடைகளை எழுதியுள்ளார். எனினும், சரியாக எழுதவில்லையே என்று, "டென்ஷனாக" இருந்தார். பறக்கும் படை குழுவினர், தேர்வு அறைக்குள் சென்றதும், திடீரென விடைத்தாளை துண்டு, துண்டாக கிழித்து, அதிகாரிகள் முன்னிலையிலேயே கீழே போட்டார். மாணவரின் செயலைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், தேர்வுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் உத்தரவின்படி, கிழிக்கப்பட்ட விடைத்தாளை சிறிய பிளாஸ்டிக் பையில் சேகரித்து, "சீல்" வைத்து, எடுத்துச் சென்றனர். அந்த மாணவர், உடனடியாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிகாரிகள் கூறும்போது, "விடைத்தாளை கிழிப்பது, ஒழுங்கீனச் செயல். அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவரிடம் இருந்து விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். |
Friday, March 11, 2011
இயற்பியல் தேர்வு எளிதாகவே இருந்தது - 12-03-2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment